search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோப்பூர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி"

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்று ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #MinisterVijayabaskar #AIIMS #AIIMSinMadurai
    திருப்பரங்குன்றம்:

    மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்கப்படும் என மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    தோப்பூரில் ஆஸ்பத்திரி அமைக்க சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பு வந்தவுடன் மாநில அரசு தரப்பில் ஆஸ்பத்திரி அமைக்க அனைத்து நடவடிக்கைளும் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

    ஆஸ்பத்திரி அமைய உள்ள இடத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரி குறித்த திட்ட அறிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் விளக்கினர். ஆய்வின் முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை மாவட்டம் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தமிழகத்துக்கும், சுகாதாரத்துறைக்கும் பெருமை சேர்க்கும் வி‌ஷயமாகும்.



    எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி வந்தார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு விதித்துள்ள குடிநீர், மின்சாரம், ஐ.ஓ.சி. பைப் லைன் உள்பட 5 நிபந்தனைகள் குறித்து 2 நாட்களில் ஆய்வு கூட்டம் நடத்தி நிவர்த்தி செய்யப்படும்.

    இதுதொடர்பான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மருத்துவமனைக்கு தேவையான 200 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது. ஆஸ்பத்திரி கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    ரூ.1500 கோடி மதிப்பில் அமைக்கப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் டெல்லிக்கு இணையாகவும், உலகத்தரத்திற்கும் சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.150 கோடி மதிப்பில் தமிழக அரசு சார்பில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிட பணிகள் தொடங்கி விரைவில் நிறைவடைய உள்ளது.

    இதுதவிர ரூ.590 கோடி மதிப்பில் செங்கல்பட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. விரைவில் பணிகள் முடிந்து இதனை பிரதமர் மோடி திறந்து வைப்பார்.

    தமிழகத்தில் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த உலக வங்கி ரூ.2685 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த நிதி வந்தவுடன் தமிழகம் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterVijayabaskar #AIIMS #AIIMSinMadurai

    ×